ரயில்வே பால சுவர் இடிந்தது ஈரோடு - கரூர் ரயில்கள் நிறுத்தம்
ஈரோடு: ரயில்வே பால பக்கவாட்டு சுவர் இடிந்ததால், ஈரோடு - கரூர் மார்க்கத்தில் செல்லும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஈரோடு - கரூர் மார்க்கத்தில் சாவடிபாளையம் அருகே கேட்புதுார் உள்ளது. இவ்வழியாக ஈரோடு - கரூர் மார்க்க ரயில் பாதை அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கேட்புதுார் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ், பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும செல்கின்றன. நேற்றிரவு 8:30 மணிக்கு ரயில்வே நுழைவு பாலத்தின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. பாலத்தின் கீழ் எந்த வாகனத்தையும் இயக்க முடியவில்லை. இதனால், ஈரோடு - கரூர் மார்க்கமாகச் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதேபோல் பக்கவாட்டு சுவர் விழுந்ததால், ஜல்லி, தண்டவாளம் பலமிழக்கும் வாய்ப்புள்ளது. இதனால், ரயிலை இயக்க வேண்டாமென முடிவு செய்தனர். இந்நிலையில், கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயில் ஈரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சாலையில் விழுந்த சுவர் இடிபாடுகளை அகற்றி தடுப்புகள் அமைத்து, ஜல்லி, தண்டவாளம் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், கரூர் மார்க்கமாக ஈரோடு வரும் ரயிலை, கரூர் அல்லது கொடுமுடி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாலத்தின் உறுதித் தன்மையை உறுதி செய்த பிறகே, ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.