பெருந்துறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
பெருந்துறை:பெருந்துறை நகராட்சி சார்பில், தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடந்தது.நகராட்சி மேலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. அதன் அடிப்டையில், மழைநீர் சேகரிப்பு அவசியம் என்பதால், பெருந்துறை நகராட்சி எல்லைக்குட்பட்ட, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை, 10 நாட்களில் கட்டி முடிக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படாத இடங்களில் நகராட்சி நிர்வாகம் தொட்டியை அமைத்து, அதற்கான செலவினங்களை உரியவர்களிடம் வசூலிக்கும். இதே போன்று, டிசம்பர் முதல் வீடுகளில் மழைநீர் தொட்டி அமைத்திட அறிவுறுத்தி, அனைத்து வார்டுகளிலும் நோட்டீஸ் வழங்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கட்டட ஒப்பந்ததாரர்கள், பதிவு பெற்ற பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.