ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு ; ஆற்றங்கரையோர மக்கள் பவானியில் மறியல்
பவானி: பவானி பழைய பஸ் ஸ்டாண்ட் தொடங்கி, பண்டார அப்பிச்சி கோவில் வரை, பவானி ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து, 133 வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருப்பது நீர்வளத் துறை ஆய்வில் கண்டறியப்பட்டது. இவற்றை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீர்வளத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்படி முதல் கட்டமாக, ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்புகளை துண்டிக்க மின்வாரிய துறை, பாதுகாப்பு வேண்டி வருவாய் துறை, போலீசாருக்கு கடிதம் அனுப்பினர்.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள், நாளை அதாவது நேற்று, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறினர்.இந்நிலையில் நேற்று காலை, 8.30 மணியளவில், பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பழனிபுரம், மேற்கு தெரு, சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், அந்தியூர்-மேட்டூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்க, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன், நகர்மன்ற தலைவர் சிந்துாரி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட, 10 பேரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். ஆத்திரமடங்காத மக்கள் மறியலை கைவிட்டு, தாலுாகா அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அங்கும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து, தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக கூறினர். இதையடுத்து மறியலை குடியிருப்புவாசிகள் கைவிட்டனர். மறியலால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பவானி நகர பகுதி பரபரப்பாக காணப்பட்டது.