வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
ஈரோடு தமிழக அளவில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முதல், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்தை அறிவித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஈரோடு தாலுகா அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில துணைத் தலைவர் குமரேசன், கோரிக்கை குறித்து பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிக்கு ஒதுக்கப்பட்ட, 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும்.சான்றிதழ் வழங்கும் பணிகள், உங்களுடன் ஸ்டாலின் உட்பட அரசின் சிறப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணி தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.போராட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள், வருவாய் அலுவலக உதவியாளர்கள் என, மாவட்டத்தில், 480 பேர் பங்கேற்றனர். 48 மணி நேர போராட்டத்தால் தாலுகா அலுவலகங்களில் நடக்கும் சான்றிதழ் வழங்குதல் உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.