தீப்பந்தம் ஏந்திய சாலை பணியாளர்கள்
ஈரோடு, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தீப்பந்தம் கையில் ஏந்தி நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும்.மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். சாலை பராமரிப்பை தனியார் மயப்படுத்துதலை கைவிட வேண்டும். தமிழக அரசே சாலைகளை பராமரிக்க வேண்டும். அப்பணிகளில் கிராமப்புற இளைஞர்களை நியமிக்க வேண்டும்.சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றமான, 5,200 ரூபாய், 20,200 ரூபாய், தர ஊதியம், 1,900 ரூபாய் என வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.