ஈரோட்டில் தள்ளுபடியில் ஜவுளி விற்பனை அதிகாலையிலேயே குவிந்த மக்களால் சாலைகள் ஸ்தம்பிப்பு
ஈரோடு: ஈரோட்டில் பிரபல ஜவுளி கடைகள் உட்பட பல கடைகளின், 'ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்' என, 50 சதவீதம் மற்றும் மொத்த விற்பனை செய்ததால், அதிகாலையிலேயே குவிந்த ஆயிரக்கணக்கான மக்களால், சாலைகள் ஸ்தம்பித்தன.திருப்பூரில் தயாராகும் பனியன் ரகங்கள், கரூரின் 'நிட்டிங்' ரகங்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் சேலை, வேட்டி அதிகம் தயாரிக்கப்படுகிறது. ஈரோட்டில் இவை அனைத்துக்கும் நேரடி விற்பனையகம், குடோன் சேல்ஸ், தவிர ஈரோட்டில் உற்பத்தியாகும் அனைத்து வகை ஆடைகள், ஆயத்த ஆடைகள், பெட்ஷீட், துண்டு விற்பதால், பொதுமக்கள் மட்டுமின்றி கடைக்காரர்கள், ஜவுளி வியாபாரிகள் அதிகம் கொள்முதல் செய்கின்றனர்.தீபாவளிக்காக கடந்த, 15 நாட்களுக்கு மேலாக இரவு, 1:00 மணி வரை கூட ஜவுளி விற்பனை நடந்தது. மணிக்கூண்டு சாலை, ஆர்.கே.வி., ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்., வீதி, பெருந்துறை சாலை, கனி மார்க்கெட், பனியன் மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு முதல் நாள் (30) காலை துவங்கிய விற்பனை தீபாவளி அன்று அதிகாலை, 3:00 மணி வரை நடந்தது. தீபாவளி நாளில், 90 சதவீத ஜவுளி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் ஆர்.கே.வி., சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடைகள் உட்பட பிற ஜவுளி கடைகள், மணிக்கூண்டு சாலை, ஈஸ்வரன் கோவில் வீதிகளில் சில கடைகள் மற்றும் குடோன்களில் 'ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்' என விற்பனையில் ஈடுபட்டனர்.இதனால் அதிகாலை, 2:00 மணி முதல் மக்கள் வரத்துவங்கி, 3:00 மணி முதல் காலை, 10:00 மணி வரை விற்பனை நடந்தது. பல ஆயிரம் மக்கள் குவிந்தனர். 50 சதவீத தள்ளுபடி, 2, 3, 4 துணிகள் குறிப்பிட்ட விலை, எதை எடுத்தாலும் குறிப்பிட்ட விலை என்ற ரீதியில் விற்றுத்தீர்த்தனர். மக்கள் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கடைக்காரர்களும் வந்தனர். ஆயத்த ஆடைகள் போன்று தயார் நிலையில் உள்ளவற்றை விற்பனை செய்ததால், தேவையானவற்றை மக்கள் விரைவாக வாங்கி, கலைந்தனர். ஜவுளி கடைகளில் விற்பனை நடந்ததால் அப்பகுதியில் டீக்கடை, சிறிய ேஹாட்டல்கள், ஆட்டோக்கள், டாக்ஸிகளின் செயல்பாடும் அப்போதே முழு அளவில் இருந்தது. இதுபற்றி ஆர்.கே.வி., சாலை ஜவுளி நிறுவனத்தினர் கூறியதாவது: கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளிக்கு அடுத்த நாளில் இதுபோன்ற விற்பனை நடந்து வருகிறது. முன்பு சிறிய கடை, ஆயத்த ஆடை போன்ற உற்பத்தி நிறுவனங்களின் நேரடி விற்பனை, குடோன் விற்பனை நடக்கும். இந்தாண்டு பெரிய நிறுவனங்கள் கூட விற்பனையில் ஈடுபட்டதால், கூட்டம் பல மடங்கு அதிகரித்தது.