உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேபி வாய்க்காலை 6 கி.மீ.,க்கு விரிவுபடுத்த ரூ.83.30 கோடி ஒதுக்கீடு

பேபி வாய்க்காலை 6 கி.மீ.,க்கு விரிவுபடுத்த ரூ.83.30 கோடி ஒதுக்கீடு

ஈரோடு:காளிங்கராயன் வாய்க்காலை புனரமைத்து, மாசுபாட்டை தடுக்க பேபி வாய்க்காலை விரிவுபடுத்த, ரூ.83.30 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி காளிங்கராயன் அணைக்கட்டு முதல், 56.5 மைல் (90.5 கி.மீ.,) வரை காளிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது. ஈரோடு, சாவடிபாளையம், ஊஞ்சலுார், கொடுமுடி அருகே ஆவுடையார்பாறையில் நொய்யல் ஆற்றில் கலந்து, காவிரியில் சென்றடையும். இதன் மூலம், 15,743 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.காளிங்கராயன் வாய்க்காலில் சாய, சலவை, தோல் ஆலை கழிவுகள், மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதி குடியிருப்பு கழிவு நீரும் கலக்கிறது. இதனால் பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும் குடிநீராக வழங்க சிக்கல் எழுகிறது. இதனை தடுக்க, 11 ஆண்டுகளுக்கு முன் காளிங்கராயன் வாய்க்காலை ஒட்டி, முதல் மைல் துவங்கி, வைராபாளையம் வரை, 7.5 கி.மீ., துாரம் பேபி வாய்க்கால் (துணை வாய்க்கால்) கட்டினர். அனைத்து கழிவும், பேபி வாய்க்காலில் சேகரித்து, சுத்திகரிப்பு செய்து, காவிரியில் சேர்க்க திட்டமிட்டனர். ஆனால், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று வரை அமைக்காததால், பேபி வாய்க்கால் துார்ந்து போய், காளிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது. இந்நிலையில் பேபி வாய்க்காலை, 6 கி.மீ., துாரத்துக்கு விரிவுபடுத்த திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பினர். தற்போது காளிங்கராயன் வாய்க்காலை புனரமைத்து, பேபி வாய்க்காலை, 6 கி.மீ., துாரம் விரிவாக்கம் செய்ய, 83.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.இதுபற்றி, ஈரோடு கீழ்பவானி வடிநில கோட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:காளிங்கராயன் வாய்க்காலில், கழிவு நீர் கலப்பதை தடுக்க பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது அதனை விரிவுபடுத்தி, வாய்க்காலை துார்வார, 83.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வந்ததும், டெண்டர் விடப்பட்டு வரும் ஜூன், ஜூலை மாதம் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது. இத்திட்டப்படி, வைராபாளையம் பகுதி முதல் வெண்டிபாளையம் வரை பேபி வாய்க்கால் வெட்டப்படும். மாசு நீர், பிற கழிவு நீர் பேபி வாய்க்காலில் வரும்போது காளிங்கராயன் வாய்க்கால் துாய்மையாக இருக்கும். இருந்தாலும், பேபி வாய்க்கால் கழிவு நீரும் காவிரியில் சேரும் வகையில் உள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விரைவில் திட்டம் வகுத்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை