குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு
சென்னிமலை:சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையத்தில், சாமிநாதன் என்பவரின் கல் குவாரி அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம், மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், சென்னிமலையில் நடந்தது. ஈரோடு ஆர்.டி.ஓ., முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லாவண்யா, பெருந்துறை தாசில்தார் ரவிக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். எக்கட்டாம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, குவாரி அமைக்க முழு ஆதரவு தெரிவித்தனர். அதற்கான மனுக்களையும் அதிகாரிகளிடம் வழங்கினர். கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முகிலன், பாரதி, விவசாய சங்க நிர்வாகிகள், குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினர். முகிலன் பேசியபோது குறுக்கிட்ட மக்கள், 'நீங்கள் வெளியூர்க்காரர்; எங்கள் ஊரில் குவாரி அமைவதால் உள்ளூரில் வசிக்கும் எங்களுக்கு பாதிப்பில்லை' எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். கருத்து கேட்பு கூட்டம் மூன்று மணி நேரம் நடந்தது.