உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இட ஒதுக்கீட்டில் கல்வி கட்டணம் பாக்கி பெற்றோர்களுக்கு கூட்டம் நடத்திய பள்ளி

இட ஒதுக்கீட்டில் கல்வி கட்டணம் பாக்கி பெற்றோர்களுக்கு கூட்டம் நடத்திய பள்ளி

ஈரோடு, அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி, ஈரோட்டில் தனியார் பள்ளி நடத்திய கூட்டத்தால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஈரோடு, கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைபள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசின், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கான கல்வி தொகையை மத்திய அரசு செலுத்தும்.கடந்த இரண்டாண்டாக மத்திய அரசு செலுத்தாததால், மாணவர்களின் பெற்றோர் தொகையை செலுத்துமாறும், மத்திய அரசு நிதி கிடைத்த பின், தொகை திருப்பி தரப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக பெற்றோர்களை அழைத்து நேற்று கூட்டம் நடத்தி அறிவுறுத்தியுள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கல்வி தொகையை கேட்டு பெற்றோரை வற்புறுத்த கூடாதென்று, பள்ளி கல்வி துறை சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் கூட்டம் நடத்தப்பட்டது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் கூறியதாவது: இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் கல்வி தொகையை அரசே செலுத்தி விடும். கல்வி கட்டணத்தை கேட்டு பெற்றோரை அச்சுறுத்த கூடாது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலரை அனுப்பி விசாரிக்க சொல்கிறேன்.இதுகுறித்து பெற்றோர் என்னிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி