சிவன்மலை கோவிலில் சஷ்டி விழா தொடக்கம்
காங்கேயம், நவ. 3-திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மதியம். 12:00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி, சஷ்டி விரதம் தொடங்கினர்.கோவிலை வலம் வந்த சுவாமி, மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் கோவிலுக்கு சென்றார். இங்கு தினமும் காலை, மாலை அபிஷேகம், ஆராதனை, திருவீதியுலா நடக்கும். சஷ்டி விழா தொடங்கியதால், பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. வாகனங்கள் நிறுத்தும் இடம் வரை பக்தர்கள் வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு வரை பக்தர்கள் வந்தபடியே இருந்தனர். 7ம் தேதி மாலை சூரசம்ஹாரம், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள் தலைமையிலான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.