சிப்காட் ஸ்டீல் நிறுவன உரிம விவகாரம் மா.க.வா., ஆய்வு நடத்த கோரிக்கை
சென்னிமலை:பெருந்துறை சிப்காட் வளாகத்தில், இரும்பு குழாய் தயாரிக்கும் ஒரு ஸ்டீல் நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தால் சுற்றுவட்டார பகுதி மற்றும் செங்குளம் உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நிறுவனத்தின் கழிவுநீரை லாரியில் கொண்டு சென்று காவிரி ஆற்றில் வெளியேற்றி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாக கூறப்படும் புகாரில், சித்தோடு போலீசார் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நிறுவனத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அபாயகர கழிவுகளை கையாள்வதற்கான அனுமதி காலாவதியானதும், கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் டிச.,12ம் தேதியுடன் முடிகிறது. உரிமத்தை புதுப்பிக்க மாவட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அணுகி நிறுவனத்தின் தரப்பில் ஆதரவு திரட்டும் முயற்சி நடக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்கூறியதாவது:அபாயகரமான இந்நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிப்பது வெறும் அலுவலக நடைமுறையாக இருக்க கூடாது. ஏற்கனவே கழிவுநீர் வெளியேற்றம் தொடர்பாக நிறுவனத்தின் மீது போலீஸ் வழக்கு நிலுவையில் உள்ளது. எவ்வித அழுத்தத்திற்கும் அதிகாரிகள் இடம் கொடுக்கக் கூடாது. உரிமம் புதுப்பிப்பதற்கு முன் பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும். ஈங்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி நிலம், மண் மற்றும் நிலத்தடி நீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.