சிறுதானிய மதிப்பு கூட்டு மையம் குன்றி மலை கிராமத்தில் திறப்பு
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கடம்பூர், குன்றி பழங்குடி கிராமத்தில், 23.5 லட்சம் ரூபாய் மதிப்பில் நகரும் சூரியசக்தி சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம் திறக்கப்பட்டது.தமிழக அரசின், 'கிராமம் தோறும் புத்தாக்கம் - வளர்ச்சி கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்' என்ற அடிப்படையில் கடம்பூர் மலை, குன்றி அடர் வன கிராமத்தில் பழங்குடி மக்களின் சிறுதானிய உணவு பாதுகாப்பு, பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 23.5 லட்சம் ரூபாய் மதிப்பில் 'தழல்' நகரும் சூரிய சக்தி சிறுதானிய பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டது. தமிழக அரசின் 'டிஎன் ஸ்டார்ட் - அப்' நிறுவன துணை தலைவர் சிவகுமார், மையத்தை திறந்து வைத்தார். முற்றிலும் சோலார் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.குன்றி, உக்கணியம், குட்டையூர் மலைப்பகுதி அடர் வன கிராமத்தில் பழங்குடிகள் ராகி, தினையை பிரதான உணவாக பயன்படுத்துவதால், இந்த இயந்திரம் அவர்களுக்கு உதவும். தற்போது, 20 முதல், 25 கி.மீ., துாரமுள்ள கடம்பூர் மற்றும் சம வெளிப்பகுதிக்கு சென்று, பதப்படுத்துதல், அரைத்து, சுத்தம் செய்து எடுத்து வரும் பணி செய்கின்றனர். மொத்தமாக மலைப்பாதையில் ஏறி, இறங்கி எடுத்து செல்ல இயலாத நிலையில், இனி இம்மையத்தில் அப்பணி மேற்கொள்ளலாம். 1,500க்கும் மேற்பட்டோர் பயன் பெறுவர்.நிர்வாகிகள் வேணுகோபால், செல்வமுரளி உட்பட பலர் பங்கேற்றனர்.