சிவன்மலை கோவிலில் சூரசம்ஹாரம்
காங்கேயம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா கடந்த, 22ம் தேதி காலை தொடங்கியது. அன்று மதியம் சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளுளினார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர்.தினமும் காலை, மாலை அபிஷேகம், ஆராதனை, திருவுலா காட்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பிறகு, பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன், 6:45 மணியளவில் முருகப்பெருமான் போருக்கு புறப்பட்டார். மலை அடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளிலும் கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன், தாரகாசூரன் தலையை கொய்தார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கினர். இன்று மாலை சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார்.* தாராபுரம் புதுக் காவல் நிலைய வீதி சுப்ரமணியசுவாமி கோவில் சூரசம்ஹார நிகழ்வு, நேற்றிரவு, 7:00 மணிக்கு நடந்தது. அலங்கியம் ரோடு, பெரிய கடைவீதி, டி.எஸ்.கார்னர் மற்றும் சோளக்கடை வீதி வழியாக சென்ற ஊர்வலத்தில், சூரபத்மனை சுப்பிரமணியர் வதம் செய்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.