உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
ஈரோடு, 'உங்களுடன் ஸ்டா லின்' திட்ட முகாம், ஈரோடு மாவட்டத்தில் இன்று துவங்கி, ஒரு மாதத்தில், 114 இடங்களில் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:இத்திட்ட முகாமை முதல்வர் ஸ்டாலின், சிதம்பரத்தில் இன்று துவக்கி வைக்கிறார். அதேநேரம் மாநில அளவில் அனைத்து இடங்களிலும் துவங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் அக்., மாதம் வரை முகாம் நடத்தப்பட்டு, நகர்புறங்களில் கால்நடை, வேளாண் துறை தவிர, 13 துறைகளில், 43 சேவைகளும், கிராமப்புறங்களில் இத்துறைகள் சேர்த்து, 15 துறைகளில், 46 சேவைகள் குறித்த மனுக்கள் பெறப்படும். மனுக்கள் மீது, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் ஆக., 14 வரை, 114 முகாம் நடத்தப்படும். அதே இடத்தில் மருத்துவ முகாமும் நடக்கும். மகளிர் உரிமைத்தொகை பெற மனுக்கள் பெறப்படும். ஈரோடு பிளாட்டினம் மஹாலில் இன்று காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்கிறார். இவ்வாறு கலெக்டர் கூறினார்.