மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்...
15-Nov-2024
காங்கேயம், நவ. 22-உலக அளவில் பிரசித்தி பெற்றதாக காங்கேயம் காளைகள் திகழ்கின்றன. கரிய நிறம், கூரான கொம்புகள், மலையை ஒத்த திமில்கள், களிற்றுக்கு ஈடான கம்பீர தோற்றம் என காண்போரை மிரள வைக்கும் காங்கேயம் காளைகள்தான், ஜல்லிக்கட்டை கலக்கும் பிரதான காளையாக உள்ளது. காங்கேயத்தின் அடையாளமாக திகழும் காங்கேயம் காளைக்கு சிலை அமைக்க, பல ஆண்டுகளாக மக்கள் குரல் கொடுத்து வந்தனர்.இதை தொடர்ந்து, 2020ல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, காங்கேயம் காளை சிலை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார். கடந்த, 2021ல் காங்கேயத்துக்கு பிரசாரத்துக்கு வந்த பழனிசாமி, காங்கேயம் ரவுண்டானாவில் காங்கேயம் காளைக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஸ்டாலின் மட்டுமின்றி சாமிநாதனும், தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கேயம் காங்கேயம் சிலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. காங்கேயம் காளை சிலை அமைக்க, காங்கேயம் யூனியன் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி, திருப்பூர் கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டது. மேலும் அரசு செயலர், பொதுத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் கோட்டாட்சியர் என பல்வேறு துறைக்கும் கடிதம் எழுதப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் சாமிநாதன், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், சிலை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆனால், அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமையில், காங்கேயம் மக்கள், 1,500க்கும் மேற்பட்டோர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வரும், 27ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கு இணையவழி ஆதரவு சேகரிக்கும் பணியும் நடக்கிறது. இதற்கு நேற்றுவரை, 800 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
15-Nov-2024