மாநகராட்சி அலுவலகத்தில் நாளை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்கம் அறிவிப்பு
ஈரோடு, தமிழ்நாடு துாய்மை பணியாளர் சார்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் கூறியதாவது: ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் நுாறு வீடுகளுக்கு குப்பை வாங்க வேண்டும் என்ற அரசாணை அடிப்படையில் பணியில் சேர்த்தனர். தற்போது காலை, 7:௦௦ மணி முதல் மதியம், 2:௦௦ மணி வரை வேலை செய்ய வற்புறுத்துகின்றனர். மாதம், 5,௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. பணி நேரத்தை முறைப்படுத்தி சம்பளத்தை உயர்த்த வேண்டும். சாராயத்தால் உயிரிழப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கும் தமிழ அரசு, பணியின் போது உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும், 5 லட்சம் இழப்பீடு தொகையை, 20 லட்சம் ரூபாயாக, ஓய்வூதியத்தை, 5,௦௦௦ ரூபாயாக உயர்த்த வேண்டும். கிராமங்களில் குடிநீர் விநியோகிக்கும் ஒ.எச்.டி பணியாளர்ள், மேல்நிலைத் தொட்டி இயக்குவோருக்கு ஓய்வூதியம், தொகுப்பூதியம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு, 240 நாட்கள் பணி செய்தால், போனஸ் வழங்க சட்டம் உள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில், 240 நாட்கள் பணியாற்றிய சுய உதவிக் குழு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். மாநகராட்சியில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை), மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு கூறினார்.