கோபி அருகே பெண்ணை கொன்று வாழைத்தோட்டத்தில் புதைத்த கொடூரம்
கோபி,கோபி அருகே கொலை செய்யப்பட்டு, வாழைத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சடலத்தை, சிறுவலுார் போலீசார் தோண்டி எடுத்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே கெட்டிச்செவியூரில், ஒரு வாழைத்தோட்டத்தில், மழை ஈரத்துக்கு முளைத்திருந்த காளானை பறிக்க அதே பகுதியை சேர்ந்த சிலர் நேற்று காலை, 6:30 மணிக்கு சென்றனர். தோட்டத்துக்குள் ரத்தத்துடன் கூடிய கத்தி கிடக்கவே, சிறுவலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, தோட்டத்துக்குள் குழி தோண்டி பெண்ணை புதைத்திருப்பது தெரியவந்தது. நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன், சிறுவலுார் போலீசார் முன்னிலையில், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவ குழுவினர், அடையாளம் தெரியாத பெண் உடலை நேற்று மாலை, 5:00 மணிக்கு தோண்டி எடுத்து, உடற்கூறு பரிசோனை செய்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் இடது கையில் தேசியக்கொடி, அதன் அருகே பட்டாம்பூச்சி பச்சை குத்தப்பட்டிருந்தது. பலமான ஆயதத்தால் தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அந்த பெண், 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் என்றும் தெரிகிறது.