தொழில் வரி நிலுவை ரூ.22 கோடி மாநகராட்சி துணை கமிஷனர் தகவல்
ஈரோடு:வணிக, தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைத்தல், நெகிழி சேகரிப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வணிகர்கள், தொழில் நிறுவனத்தினர், மாநகர் நல அலுவலர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி, தொழிலாளர் நல துறை உதவி கமிஷனர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் துணை கமிஷனர் தனலட்சுமி பேசியதாவது:வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகையில் தமிழில் பிரதானமாகவும், தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு மொழியிலும் கடையின் பெயரை எழுதி வைத்து கொள்ளலாம். இதற்கு 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை எழுதாத வணிக, தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக்கை சாக்கடையில் போடுவதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சிக்கு, 10 ஆண்டுகளில் தொழில் வரியாக வணிக, தொழில் நிறுவனங்கள், 22 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் இது நிலுவையாக உள்ளது. வணிக, தொழில் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும் சிறிது, சிறிதாக தொழில் வரியை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.