தின்னப்பட்டியில் உலா வந்த சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்ததால் குழப்பம்
தின்னப்பட்டியில் உலா வந்த சிறுத்தைமர்மமாக இறந்து கிடந்ததால் குழப்பம்மேட்டூர், செப். 28-சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம், தின்னப்பட்டி ஊராட்சியில் கடந்த, 20 நாட்களாக உலா வந்த, 4 வயது ஆண் சிறுத்தை வீடுகள், தோட்டங்களில் புகுந்து ஆடு, கோழி, நாய்களை வேட்டையாடியது. சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க கோரி கடந்த, 10, 14, 25 ஆகிய தேதிகளில் வனத்துறை சோதனைசாவடி அருகே, சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர்.இதையடுத்து, வனத்துறையினர் தின்னப்பட்டி ஊராட்சியில், ஐந்து இடங்களில் கூண்டுகள் வைத்தும், 15 இடங்களில் கேமராக்கள் பொருத்தியும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடைசியாக கடந்த, 24ல் இரவு, 8:00 மணிக்கு வெள்ளக்கரட்டூர் அடுத்த நாயம்பாடி கொட்டாய் விவசாயி கணேசன், 35, என்பவரின் இரு ஆடுகளை கடித்து கொன்றது.அதன் பின்பு, கடந்த இரு நாட்களாக சிறுத்தையை காணவில்லை. இந்நிலையில், நேற்று காலை வெள்ளக்கரட்டூர் கரடு பகுதியில் முனியப்பன் கோவில் அருகே, சிறுத்தை இறந்து அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங் ரவி, மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.பின், வனத்துறை மருத்துவ குழுவை சேர்ந்த ஒருவர், இரு கால்நடை மருத்துவர்கள் என மூன்று பேர், அழுகிய நிலையில் முடிகள் உதிர்ந்து, உடலை புழுக்கள் அரித்த நிலையில் இருந்த, சிறுத்தையை வெட்டி பரிசோதனை செய்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த கிராம மக்கள் சிறுத்தையை பார்க்க அப்பகுதிக்கு சென்றனர். எனினும், வனத்துறை ஊழியர்கள் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை. பின்பு வன அலுவலர் அனுமதி பெற்று, சிறுத்தையை பார்த்து சென்றனர். சிறுத்தை உடலில் இருந்து, ஒரு துப்பாக்கி குண்டு எடுத்த நிலையில், அதன் உடலிலும் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. ஆனால், சிறுத்தையை சுட்டது யார்? அடித்து கொன்றது யார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து பரிசோதனை அறிக்கை வந்த பின்பு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை அலுவலர்கள் கூறினர்.