முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது: ரூ.54 ஆயிரம் அபராதம்
சென்னிமலை:-சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, புளியம்பாளையம் பகுதியில், ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில், சென்னிமலை வனச்சரக அதிகாரி முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ரோந்து சென்றனர். அப்போது, வாய்ப்பாடி வனச்சரக பகுதியில் ஏர்கன் வைத்துக்கொண்டு, சிலர் சுற்றுவதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்த போது சேலம் மாவட்டம், சங்ககிரி, மகுடஞ்சாவடியை சேர்ந்த நடராஜ், 25, வடிவேல், 32, பிரகாஷ், 35, என தெரியவந்தது.மூவரும் வாய்ப்பாடி, புளியம்பாளையம் பகுதியில் முயல் வேட்டைக்காக வந்ததை ஒப்புக்கொண்டனர். முயல் வேட்டை ஆடுவது வன குற்றம் எனக்கூறி, மூவரை கைது செய்து மாவட்ட வன அலுவலர் முன், ஆஜர்படுத்தி குற்றத்தை ஒப்பு கொண்டனர். இதையடுத்து ஒருவருக்கு, 18 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம், 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.