| ADDED : நவ 20, 2025 02:50 AM
சத்தியமங்கலம், கேர்மாளம் அருகே, கொலை செய்து புதைத்த வழக்கில், மூன்று பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் அருகே சி.கே.பாளையம் பகுதியில் கடந்த, 15ம் தேதி புதைக்கப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதை பார்த்த, ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஆசனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மறுநாள் சென்று தோண்டி பார்த்ததில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் இறந்தவருக்கு, 45 வயதிருக்கும் என்பதும், தலையில் படுகாயம் இருப்பதால் அடித்து கொலை செய்யப்பட்டு, 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் கோபி அருகே ல.கள்ளிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம் என்பது உறுதி செய்யப்பட்டது. திருமணம் ஆகாத செல்வம், கடந்த சில மாதங்களாக கேர்மாளம் மலை கிராமங்களில் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், மது பழக்கம் உள்ளவர் என்பதும் தெரிகிறது. மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில், அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என, போலீசார் கூறினர். இந்நிலையில், கொலை தொடர்பாக கேர்மாளம் பகுதியை சேர்ந்த, 3 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.