உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வாடகை உயர்வு 37 கடைகளை காலி செய்த வியாபாரிகள்

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வாடகை உயர்வு 37 கடைகளை காலி செய்த வியாபாரிகள்

ஈரோடு, நவ. 15-ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் நான்கு தளங்களில், 292க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் இருக்கின்றன. இங்கு முன்னுரிமை அடிப்படையில், ஜவுளி வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டது. அப்போது வைப்புத்தொகை, 50 ஆயிரம் ரூபாய், மாதந்தோறும் வாடகை, 3,௦௦௦ ரூபாய் (18 சதவீத ஜி.எஸ்.டி., உள்பட) செலுத்துமாறு, அப்போதைய கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார். இதன்படி வியாபாரிகள் வைப்புத்தொகை செலுத்தி, வாடகை செலுத்தி வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன் வாடகையை, 3,460 ரூபாயாக மாநகராட்சி உயர்த்தியுள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: எவ்வித முன்னறிவிப்புமின்றி, வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. ஆளும்கட்சியினர் தயவால் நுாற்றுக்கும் மேற்பட்டோர், சாலையோரங்களில் ஜவுளி கடை அமைந்துள்ளனர். இதில்லாமல் வணிக வளாகம் முன்பும் ஜவுளி கடை நடக்கிறது. இதனால் கனி மார்க்கெட் கடைகளுக்கு மக்கள் வராமல், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடகையை உயர்த்தியுள்ளனர். மூன்றாவது தளத்தில், 78 கடைகள் செயல்பட்ட நிலையில், 37 கடைகளை வாடகை உயர்வால், வியாபாரிகள் காலி செய்து விட்டனர். மேலும் சிலர் காலி செய்யும் முடிவில் உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து வியாபாரிகளும் கடைகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ