விதிகளின்படி வாக்காளர் சிறப்பு திருத்தம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ஈரோடு, ஈரோட்டில், மேற்கு தொகுதியில் பணியாற்ற உள்ள, 302 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது:நகரமயமாதல், அடிக்கடி வாக்காளர்கள் குடி பெயர்தல், குடி பெயரும்போது பழைய இடத்தில் பதிவில் உள்ள பெயரை நீக்காமல் விடுதல், மீண்டும் புதிய இடத்தில் சேர்த்தல், இறந்தவர்களது பெயர்களை நீக்காதது, வெளிநாட்டவர்களின் தவறான சேர்ப்பு போன்ற காரணத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்க உள்ளது. கடந்த, 2002ம் ஆண்டுக்கு பின், தற்போது நடக்கிறது. அப்போது இருந்த வாக்காளர் பட்டியலுடன், தற்போது உள்ள வரை, 41 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளது.வரும் ஜன., 1 தகுதி நாளாக கொண்டு, இத்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 18 வயது நிரம்பிய, இந்திய குடிமகனான, அத்தொகுதியில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும். எச்சட்டப்படியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.வரும், 4 முதல் டிச., 4 வரை வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தை ஓட்டுச்சாவடி நிலை அலுவலரால் வழங்கி, உறுதி செய்ய வேண்டும். தவிர, தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்து நடைமுறைகளையும் கடைபிடித்து பெயர் சேர்ப்பு, நீக்குதல் பணியை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.ஆர்.டி.ஓ., சிந்துஜா, தாசில்தார் முத்து கிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.