தொழிற்சங்க போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பில்லை
ஈரோடு, தேசிய அளவில், நேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பொது போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை.ஈரோட்டிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு துறையினர், வங்கி பணியாளர்கள் சங்கம் என வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்தினர். ஈரோட்டில் மறியலில் ஈடுபட்ட, 345 பேர் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், முழு அளவில் ஆட்டோ, வேன், கார், டாக்ஸிகள் இயங்கின. ரயில்களும் எவ்வித பாதிப்பும் இன்றி இயக்கப்பட்டது.அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலத்தில், 12 கிளைகளில், 725 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., - கம்யூ.,க்கள் உட்பட சில கட்சி சார்ந்த தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை. அதேநேரம், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., உட்பட பல்வேறு தொழிற்சங்க தொழிலாளர்கள், சங்கங்கள் சாராத தொழிலாளர்கள் முழு அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஈரோடு காசிபாளையம் டெப்போ, ஈ-1ல் 75ல், 69 பஸ்களும், ஈ-3ல் 78 பஸ்களில், 70 பஸ்கள் இயக்கப்பட்டன. மண்டல அளவில், 725 பஸ்களில், 650க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதால், எவ்வித போக்குவரத்து பாதிப்பும் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.