காலிங்கராயனில் தண்ணீர் மாதிரி சேகரித்து ஆய்வு
ஈரோடு:ஈரோடு வைராபாளையம் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பறக்கும் படை உதவி பொறியாளர் கீர்த்தி தலைமையிலான அதிகாரிகள், நேற்று தண்ணீர் மாதிரியை சேகரித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலக்கப்படுவதாக, விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து புகார் வருகிறது. இதனால் தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது சோதனை செய்ததில் டி.டி.எஸ்., அளவு குறைவாக உள்ளது. குடிநீர் தண்ணீரை பொறுத்தவரை, 500 டி.டி.எஸ்., வரை இருக்கலாம். அதற்கு மேல் சென்றால் தண்ணீர் மாதிரி சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி உரிய காரணம் கண்டறியப்படும். ஆய்வில் சாயத்தண்ணீர் கலக்கப்பட்டிருப்பது தெரிந்தால், ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.