பெண் உடல் எரிப்பு: கொலையா என விசாரணை
அந்தியூர், தற்கொலை செய்து கொண்டதாக, பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்தனர். போலீசாருக்கு தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டதால், கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள நகலுார் கொண்டையம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 35; கார்பெண்டர். இவரது மனைவி நந்தினி, 32; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தர்மபுரி மாவட்டம், மாரன்னஹள்ளியை சேர்ந்த சபியுல்லா மகன் இம்ரான், 32; திருமணமாகாதவர். தர்மபுரியில் உள்ள தனியார் பால் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.நந்தினிக்கும், இம்ரானுக்கும், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இன்ஸ்டாவில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி காலை, கணவர் வேலைக்கு சென்றவுடன், நந்தினியின் வீட்டுக்கு இம்ரான் சென்றுள்ளார். எப்போதும், இரவு,8:00 மணிக்கு வீட்டு வரும் குமார், வழக்கத்துக்கு மாறாக, மாலை, 5:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். இருவரையும் வீட்டில் பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், உறவினர்களை அழைத்து, இருவரையும் கண்டித்துள்ளனர். மேலும், அன்றிரவு அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்தனர்.அடுத்தநாள் இரு தரப்பையும் வரச் சொல்லி அனுப்பி வைத்த நிலையில், 15ம் தேதி, பகல் 1:00 மணிக்கு, நந்தினி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நந்தினி இறந்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்காமல் மாலையில் அவரது உடலை எரித்தனர்.நகலுார் வி.ஏ.ஓ., வீரமுத்து, அந்தியூர் போலீசில் புகாரளித்தார். போலீசாருக்கு தெரியாமல் அவசரமாக எரித்ததால், கொலையாக இருக்கலாமோ என்ற கோணத்தில், அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.