நிற்காமல் சென்ற டவுன் பஸ் பெண்கள் வாக்குவாதம்
காங்கேயம், கரூர் மாவட்டம், வெள்ளாளப்பட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி வளர்மதி, 52. இவர் நேற்று முன்தினம் காலை கரூரில் இருந்து, காங்கேயம் அடுத்த படியூரில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை, 5:00 மணிக்கு வளர்மதி, அவரது உறவினர் ஜோதிமணி ஆகியோர் காங்கேயம் செல்ல பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளனர். காங்கேயம் நோக்கி வந்த 16ம் எண் கொண்ட டவுன் பஸ்சில் ஏற கைகாட்டியுள்ளனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் காங்கேயம் சென்றுள்ளார்.பின்னர் இரு பெண்களும், 15 நிமிடம் கழித்து பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் ஏறி காங்கேயம் வந்துள்ளனர். அங்கு, நிற்காமல் சென்ற பஸ் டிரைவர், கண்டக்டரிடம், பெண்களுக்கு இலவசம் என்பதால் நிற்காமல் செல்வீர்களா என கேள்வி கேட்டனர். இது குறித்து காங்கேயம் போக்குவரத்து கிளையிலும் பெண்கள் புகார் அளித்து விட்டு சென்றனர்.