சென்னிமலை கோவில் மலைப்பாதையில் தார்ச்சாலை அமைக்கும் பணி மும்முரம்
சென்னிமலை, சென்னிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல, ௪ கி.மீ., துாரத்துக்கு மலைப்பாதை உள்ளது. தார்ச்சாலையை சீரமைத்து, வடிகால் அமைத்து பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணி என, 7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இதை தொடர்ந்து மலைப்பாதையின் இரு ஓரங்களிலும் வடிகால் அமைத்தல், 13 சிறு பாலங்கள் கட்டும் பணி நடந்தது. சமீபத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிந்தது.இந்நிலையில், 24 அடி அகலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. மாலையில் மழை பெய்ததால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. நேற்று காலை மீண்டும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக ஏற்கனவே மலைப்பாதையின் இரு ஓரங்களிலும் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தின் மீது தார் ஊற்றி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வரும், 17ம் தேதிக்குள் தார்ச்சாலை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.