தியாகதுருகம்: உளுந்துார்பேட்டை - சேலம் இடையே புறவழிச்சாலை பணி நிறைவடையும் நிலையில் விபத்துகளை தடுக்க 13 இடங்களில் ரூ.262.5 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான 136.357 கி.மீ., சாலை 2008ம் ஆண்டு ரூ.941 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி துவங்கியது. இப்பணியை ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. நிலம் ஆர்ஜிதம் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் 5 ஆண்டுகள் கழித்து 2013ல் சாலை பயன்பாட்டுக்கு வந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர், சேலம் மாவட்டம் நத்தக்கரை மற்றும் மேட்டுப்பட்டி ஆகிய 3 இடங்களில் டோல்கேட் அமைத்து சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருப்பதாக காரணம் காட்டி இருவழிச்சாலைகளாக அமைக்கப்பட்டது.ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னையை முக்கிய தொழில்பெரு நகரங்களான சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களை இச்சாலை இணைப்பதால், வாகன போக்குவரத்து அதிகரித்தது.குறிப்பாக கனரக வாகனங்கள் அதிகளவில் சென்றதால், அகலம் குறைந்த புறவழிச்சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் அதிகரித்தது. அதனால், புறவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து விரிவான செய்தி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான 8 புறவழிச்சாலைகள் 37.892 கி.மீ., துாரத்திற்கு ரூ. 400 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.முதல்கட்டமாக உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலைகள் அகலப்படுத்தப்பட்டு தொடர்ந்து அடுத்தடுத்து அனைத்து புறவழிச்சாலைகளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் புறவழிச்சாலைகள் சந்திக்கும் இடங்களில் மட்டுமே அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெளிவுப்படுத்தியது.இதன் காரணமாக விபத்து அதிகம் நடக்கும் புறவழிச்சாலை சந்திக்கும் இடத்தில் நகருக்குள் வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (நகாய்) மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை அளித்தது.இதையடுத்து இவ்வழித்தடத்தில் 13 இடங்கள் தேர்வு செய்து ரூ.262.5 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.அதில், தலைவாசல், மும்முடி ஆகிய 2 பாலங்கள் வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.சார்வாய், தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் ஆகிய 3 பாலங்கள் வரும் செப்டம்பரில் பணிகள் முடிவடையும்.வாழப்பாடி புறவழிச்சாலையில் 2 பாலம், ஆத்துாரில் ஒன்று என மொத்தம் 3 பாலங்கள் வரும் நவம்பரிலும், தியாகதுருகம், செம்பியன்மாதேவி, எலவனாசூர்கோட்டை ஆகிய 3 பாலங்கள் வரும் டிசம்பரிலும் பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.உடையாப்பட்டி, ராமலிங்காபுரம் ஆகிய இரு பாலங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கட்டி முடிக்கப்படும். அதேபோல் ஆத்துார் புறவழிச்சாலையில் ஒட்டம்பாறையில் இருந்து காட்டுக்கொட்டகை வரை 2 சர்வீஸ் சாலைகள், புத்திரகவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் கோவில் அருகில் மற்றும் அம்மம்பாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் ரூ.5 கோடி மதிப்பில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப் படுகிறது.இதுகுறித்து நகாய் அதிகாரி கூறுகையில், 'உளுந்துார்பேட்டை-சேலம் இடையே விபத்துகள் அதிகம் நடந்த இடங்களை கண்டறிந்து அதனடிப்படையில் பாதுகாப்பை உறுதி செய்திட 13 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் போக்குவரத்து சிக்கல் மற்றும் அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டால், அங்கும் மேம்பாலங்கள் அமைத்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கூடுதல் மேம்பாலங்கள் தேவை
சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்து அதிகம் நிகழும் இடங்களாக உள்ள சின்னசேலம் புறவழிச்சாலை சந்திப்பு, கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலை சந்திப்பு, தியாகதுருகம் மற்றொரு புறவழிச்சாலை சந்திப்பு, எலவனாசூர்கோட்டை வெள்ளையூர் புறவழிச்சாலை சந்திப்பு, உளுந்துார்பேட்டை ஆகிய இடங்களிலும் மேம்பாலம் கட்டி முடித்தால் மட்டுமே 100 சதவீத பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.
வாகன போக்குவரத்து அதிகரிக்கும்
உளுந்துார்பேட்டை- சேலம் இடையே உள்ள புறவழிச்சாலைகள் இரு வழிச்சாலையாக இருந்ததால், விபத்துகள் அதிகரித்து வந்தன. இதனால் சென்னையில் இருந்து சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பெருநகரங்களுக்கு செல்ல வாகன ஓட்டிகள் வேலுார் வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றன. இவ்வழித்தடத்தில் பெங்களுரூ வாகனங்கள் செல்லும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். இருப்பினும் பாதுகாப்பு கருதி இவ்வழியே செல்வதை வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.தற்போது உளுந்துார்பேட்டை-சேலம் இடையே நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பெரும்பாலான வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்துவது அதிகரிக்கும். இதன் காரணமாக இவ்வழித்தடத்தில் அமைந்துள்ள ஊர்கள் அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.