கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள், செலவுக்கு பணமில்லாததால் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், ஆத்துார், கங்கைவல்லி, ஏற்காடு ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 7,73,212 ஆண்கள், 7,94,588 பெண்கள், 228 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 15 லட்சத்து 67 ஆயிரத்து 937 வாக்காளர்கள் உள்ளனர்.இத்தொகுதியில் போட்டியிட தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - நாம்தமிழர் மற்றும் சுயேச்சை என 25 நபர்கள் 37 வேட்பு மனுக்களை அளித்தனர். அதில், 4 சுயேச்சை நபர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், பிரதான கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதால், அவர்களது கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பு மனுவை யாரும் வாபஸ் பெறவில்லை. இதனால் தேர்தல் களத்தில் 13 சுயேட்சைகள் உட்பட 21 வேட்பாளர்கள் உள்ளனர். தொடர்ந்து, கடந்த மார்ச் 31ம் தேதிசுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் வழங்குதல், கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டம், வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பு என பல்வேறு வகையில் பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஈடாக சுயேச்சை வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது பெயர் மற்றும் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க, நுாதனமாகவும், சமூக பணிகளை மேற்கொண்டு வித்தியாசமான முறையிலும் பிரசாரம் செய்து, துண்டு பிரசுரம் வழங்குவது வழக்கம்.ஆனால், சின்னம் பெற்று 5 நாட்களுக்கு மேலாகியும், தேர்தல் செலவுக்கு பணமில்லை எனக்கூறி இதுவரை பிரசாரம் செய்யாமலும், ஓட்டு சேகரிக்காமலும் சைலண்டாக உள்ளனர். குறிப்பாக, பிரசாரம் செய்ய வாகனம் மற்றும் ஒலி பெருக்கிக்கு அனுமதி பெறும் வழிமுறை, நோட்டீஸ் அச்சிட அனுமதி பெறுதல், தேர்தல் செலவு கணக்கு உள்ளிட்ட விதிமுறைகள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தெரியவில்லை என்பதும் ஒரு காரணமாக உள்ளது. இதனால் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு சுயேச்சை வேட்பாளரின் பெயர், சின்னம் தெரியாமலேயே உள்ளது.