உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தினமலர் நாளிதழுடன் வரலாற்று ஆய்வாளர் சங்கம் இணைந்து கல்வெட்டு பயிற்சி வகுப்பு

தினமலர் நாளிதழுடன் வரலாற்று ஆய்வாளர் சங்கம் இணைந்து கல்வெட்டு பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி: 'தினமலர்' நாளிதழுடன் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய கல்வெட்டு பயிற்சி வகுப்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்றனர். 'தினமலர்' நாளிதழுடன் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் மாடக் கோவிலில் கல்வெட்டு பயிற்சி வகுப்பு நடத்தியது. நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடந்தது.நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் சங்கத் தலைவர் மணியன் கலியமூர்த்தி வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய தலைவர் சிங்கார உதியன், பிடாகம் ஊராட்சி தலைவர் நத்தகுமார், அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் ஆனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பயிற்சி வகுப்பில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், கோவிலில் இருந்த 15க்கும் மேற்பட்ட மன்னர்களின் கல்வெட்டுகள் குறிப்புகள் மற்றும் அதன் காலங்கள் குறித்து விளக்கினார்.சென்னை தரமணி உலக தமிழராய்ச்சி நிறுவன தொல்லியல், கல்வெட்டு பயிற்றுனர் ஜீவா, கோவிலின் கட்டட கலை அமைப்பு மற்றும் அங்குள்ள சிலைகளின் வரலாறு குறித்து விளக்கினார்.செய்யாறு அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் மதுரைவீரன், கண்காட்சியில் இடம்பெற்ற பழங்கால நாணயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.தொடர்ந்து எலவனாசூர்கோட்டை அடுத்த குலாம்தக்கா பகுதியில் கல்பாறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள 3,000 ஆண்டுகள் பழமையான ஓவியத்தின் வரலாறு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிறைவாக பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த தொல்லியல் களப்பயணத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலுார், புதுச்சேரி, சென்னை, அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தினர் பூபதி, வடிவேல், கண்ணன், சீனிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வரலாற்று ஆய்வாளர்கள் சங்க துணைத் தலைவர் கோவிந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை