நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் துவக்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலையில், கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், கல்வராயன்மலை, சின்னசேலம், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட தொலைதுார கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.இவ்வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு உதவியாளர் ஆகியோர் கால்நடைகளுக்கு அந்தந்த கிராமங்களுக்கு சென்று மருத்துவ உதவிகளை வழங்குவர். கால்நடைகளை அழைத்து வர இயலாத தொலைதுார கிராமத்தை சார்ந்த விவசாயிகள் இந்த வாகனங்கனை பயன்படுத்தி மருத்துவ உதவிகளை பெற முடியும். நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் அழகுவேல், சின்னசேலம் ஆட்டு பண்ணை துணை இயக்குநர் கோவிந்தராசு, உதவி இயக்குநர்கள் கந்தசாமி, லதா, சுகுமார், பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.