கலெக்டர் அலுவலக வளாகத்தில் விளையாட்டு மைதானம்: விரைவில் பணிகள் துவக்கம்
வீரசோழபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணி விரைவில் துவங்குகிறது.கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் கிரிக்கெட், இறகுப்பந்து, வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தனர். இங்கு விடுமுறை தினங்களில், தனியார் விளையாட்டு போட்டிகளும், நடத்தப்பட்டன.அங்கு சமூக விரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதால், மைதானத்தை பயன்படுத்துவதில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விளையாட்டு ஆர்வலர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.இந்நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் முறையான பயிற்சி பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், 400 மீ., ஓடுதளம், கால்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கூடை பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டு அரங்கத்துடன் கூடிய மைதானம் அமைக்க, கடந்த சில மாதங்களுக்கு முன், ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்காக வீரசோழபுரம் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகில், 12 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்து விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தவுடன், விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் துவக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.