| ADDED : ஏப் 29, 2024 05:25 AM
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் இருசக்கர வாகனம் நிறுத்தும் மையத்தை ஏற்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலுார் நகரத்தைச் சுற்றிலம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் நகரில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, வேலுார், கன்னியாகுமரி, மதுரை, சேலம் என பல்வேறு நகரங்களுக்கும் நேரடி பஸ் வசதி உள்ளது. எனவே சுற்று வட்டார கிராமத்தினர் வெளியூர் செல்ல வேண்டும் என்றால், இருசக்கர வாகனங்களில் திருக்கோவிலுார் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, பஸ்சில் பயணிக்கின்றனர்.ஏற்கனவே பேரூராட்சி சார்பில் வாகன நிறுத்தும் இடம் இருந்தது. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு பஸ் நிலையம் விரிவுபடுத்தப்பட்டதால் வாகன நிறுத்தமிடம் காலி செய்யப்பட்டு விட்டது. இச்சூழலில் பஸ் நிலையம் அருகே தனிநபர்கள் வாகன நிறுத்தும் இடத்தை நிறுவி வசூல் செய்து வருகின்றனர். குறுகலான இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாத சூழலில், சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.இது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் தனக்கு வரவேண்டிய வருவாயை தனி நபர்களுக்கு வேண்டுமென்றே விட்டுக் கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இச்சூழலில் பஸ் நிலையம் எதிரே தென்பெண்ணை ஆற்றை ஒட்டி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகராட்சி நிர்வாகம் வாகன நிறுத்தும் இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதுடன் நகராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.