உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கனவு இல்ல வீடு ஒதுக்கீடு கூட்டத்தில் ஆளுங்கட்சியினர், டிஷ்யூம் டிஷ்யூம்!

கனவு இல்ல வீடு ஒதுக்கீடு கூட்டத்தில் ஆளுங்கட்சியினர், டிஷ்யூம் டிஷ்யூம்!

உளுந்துார்பேட்டை ; திருநாவலுாரில் கலைஞர் கனவு இல்ல திட்ட வீடு ஒதுக்கீடு செய்வதில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலர் தரப்பினர் நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் ஒன்றியத்திற்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், 458 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பயனாளிகள் பட்டியல் தயார் செய்வதற்காக, ஊராட்சி செயலர்கள், ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டம் திருநாவலுாரில் திருமண மண்டபத்தில் நேற்று காலை துவங்கியது. கூட்டத்திற்கு பி.டி.ஓ., பூமா தலைமை தாங்கினார்.கூட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தரப்பினர், தாங்கள் கூறும் நபர்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்க வேண்டும் என்றனர். அதற்கு, திருநாவலுார் தி.மு.க., ஒன்றிய செயலர் வசந்தவேல் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தாங்கள் கூறும் பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்க வேண்டும் என்றனர்.இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திடீரென இரு தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். திருநாவலுார் போலீசார் விரைந்து சென்று, அனைவரையும் கலைத்தனர். இதனால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.மதியம், ஒன்றிய செயலர் வசந்தவேல் தரப்பினர், வீடுகளை நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தில் பி.டி.ஓ., இல்லாததால், மேலாளர் கார்த்திக்கிடம் மனு கொடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ