உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: கிராம அளவில் 562 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: கிராம அளவில் 562 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பாதிப்புக்குள்ளாகி பலர் இறந்தனர். இதனையொட்டி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் கட்டுபடுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி.,ரஜத் சதுர்வேதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டு 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாரந்தோறும் கூட்டம் நடத்தி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கருணாபுரம் மெத்தனால் அருந்தி உயிரிழிந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி செய்வதற்காக 2 துணை நிலை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து தகவல்களை தெரிவித்து, ஏற்கனவே வழங்கியுள்ள படிவங்களில் அது தொடர்பான தகவல்களை பதிவு செய்திட வேண்டும். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தடுப்பு நடவடிக்கையில் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள், காவல் துறையினர் தன்னார்வத்துடன் ஈடுபட வேண்டும். மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கலெக்டர் எடுத்துரைத்தார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,சத்தியநாராயணன், கலால் மேற்பார்வை அலுவலர் ஜெகதீஸ்வரன், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை வடிப்பக சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொ) பாலமுருகன், ஆர்.டி.ஓ.,க்கள் லுார்துசாமி, கண்ணன், டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை