பருவமழை குறைந்ததால் காய்கறி சாகுபடி பாதிப்பு
தியாகதுருகம்: தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் காய்கறி சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்கறி சாகுபடி மூலம் விவசாயிகள் கணிசமாக வருவாய் ஈட்டி வருகின்றனர். கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலை, பச்சை மிளகாய், தக்காளி, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளும் கீரை வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் இணைந்து விவசாய பணிகளை செய்யும் போது காய்கறி சாகுபடி மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். காய்கறி பயிரிட போதிய நீர் வளம் அவசியமாகும். தென்மேற்கு பருவமழை துவங்கும் ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் வரை காய்கறி சாகுபடி செய்ய ஏற்ற பருவமாக உள்ளது.இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயராமல் பல இடங்களில் கிணற்றுப் பாசனம் கை கொடுக்கவில்லை. பெரும்பாலான விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்வதை தவிர்த்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் காய்கறி உற்பத்தி இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளது.வழக்கமாக இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். காய்கறி உற்பத்தி குறைந்துள்ளதால் உள்ளூர் தேவைகளுக்கே பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இதனால், காய்கறி பயிரிட்டு வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.காய்கறி சாகுபடியில் சொட்டுநீர் பாசன முறையை நடைமுறைப்படுத்த தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.