உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 30,399; இளம் வாக்காளராக 14 ஆயிரம் பேர் சேர்ப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 30,399; இளம் வாக்காளராக 14 ஆயிரம் பேர் சேர்ப்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில், 30,399 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி (தனி), உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளும், 1,275 ஓட்டுச்சாவடி மையங்களும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 436 ஆண்கள், 5 லட்சத்து 62 ஆயிரத்து 362 பெண்கள், 240 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 11 லட்சத்து 25 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளனர். வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு, மாவட்டத்தில் கடந்த 16, 17, 23 மற்றும் 24 ஆகிய 4 தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது.மாவட்டம் முழுவதும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்தனர். பணியில் உள்ள ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.அதன்படி, 4 நாட்கள் நடந்த சிறப்பு சுருக்க திருத்த முகாமில், 30 ஆயிரத்து 399 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், இளம் வாக்காளர்கள் (18 -19 வயதுடையவர்கள்) 14,529 பேரும், (20 மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 8,087 பேர் என மொத்தமாக 22,616 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.முகாமில் பங்கேற்க முடியாத நபர்கள் தங்களது விண்ணப்பத்தை நவம்பர்., 28ம் தேதி வரை www.voters.eci.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது, வாக்காளர் உதவி என்ற மொபைல் செயலி மூலமும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜன., 6ம் தேதி வெளியிடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ