குழந்தை திருமணம் செய்த 4 பேர் மீது வழக்குப் பதிவு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் குழந்தை திருமணம் செய்த 4 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாகும் சிறுமிகள் பரிசோதனைக்காக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்கின்றனர்.அங்கு பரிசோதனை செய்யும் டாக்டர்கள், சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நபர்கள் குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். உடன், சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை செய்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளிக்கின்றனர்.அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக கோட்டை மேட்டை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ், குதிரைச்சந்தலை சேர்ந்த முனுசாமி மகன் பழனிவேல், வீரசோழபுரத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் தினேஷ், சிறுவங்கூரை சேர்ந்த பாலு மகன் அருள் ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.