மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து... அதிகரிப்பு; போலீஸ், நகராட்சியின் நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் நிகழ்ச்சி, திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்களால் விபத்து அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீப காலமாக டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கிராம திருவிழாக்களில் உள்ளூர் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு பேனர்களை வைக்கின்றனர். இது தவிர, அரசியல் சார்ந்த கூட்டங்களில் முக்கிய நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக கட்சி நிர்வாகிகள் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பெரிய டிஜிட்டல் பேனர்களை வைக்கின்றனர். கட்சி நிர்வாகிகளை வரவேற்க, சாலையோரம் நீண்ட துாரத்திற்கு சாலையை பஞ்சராக்கி, கட்சிக்கொடி கம்பங்கள் நட்டும், சாலையின் குறுக்கே அலங்கார வளைவு அமைக்கின்றனர். டிஜிட்டல் பேனர் வைப்பவர்கள் அரசிடம் கட்டாய அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. அதில், பேனர் வைப்பவர் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். சாலையோரத்தில் வைக்க வேண்டுமெனில் துறை சார்ந்த அலுவலர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று, அதை போலீசாரிடம் வழங்க வேண்டும். பேனர் அளவு, எத்தனை நாட்கள் வைக்கப்படும், என்ன நிகழ்ச்சிக்காக வைக்கப்படுகிறது, மோதல் ஏற்படும் விதமாக வாசகங்கள் உள்ளதா என்பதை தெளிவு படுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து போலீசாரிடம் அனுமதி பெற்ற கடிதத்தை வருவாய்த்துறையினரிடம் சமர்ப்பித்து, அனுமதி கிடைத்த பிறகு பேனர் வைக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை ஏதும் பின்பற்றாமல் சகட்டுமேனிக்கு மாவட்டம் முழுதும் பேனர் வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சாலையின் குறுக்கே வைக்கப்படும் அலங்கார வளைவுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மோதல் ஏற்படும் வாசகங்களை கொண்ட பேனர்கள் கிராமங்களில் அதிக அளவில் வைக்கப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்தாலும் பேனர்கள் அகற்றப்படுவதில்லை. பலத்த காற்று வீசும் போது டிஜிட்டல் பேனர்கள், அலங்கார வளைவுகள் அவ்வழியாக செல்பவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகிறது. இதில், ஒரு சிலர் காயங்களுடன் உயிர் பிழைக்கின்றனர். ஒரு சிலர் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். அசாம்பாவிதங்கள் ஏற்படும்போது மட்டும் ஒரு சில வாரங்கள் பேனர்கள் வைப்பதில் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. அப்போது, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர். அதன்பிறகு மற்ற நேரங்களில் கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் போட்டி, போட்டுக்கொண்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்கின்றனர். அதிகளவிலான புகைப்படங்களுடன் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தங்களுக்கான கவுரவம் என கட்சி பிரமுகர்கள் நினைப்பதால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை கண்காணிக்க வேண்டிய நகராட்சி, போலீஸ் அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர். இன்னும் 4 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்திற்காக வருவர். இதற்காக, பேனர்கள் அதிகளவு வைக்க வாய்ப்புள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் பேனர் வைப்பவர்கள் அரசின் விதிமுறைகள் பின்பற்றவும், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.