உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பஸ் விடுவதற்கு நடவடிக்கை தேவை! கள்ளக்குறிச்சி மாவட்ட பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பஸ் விடுவதற்கு நடவடிக்கை தேவை! கள்ளக்குறிச்சி மாவட்ட பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராமப்புறங்களில் அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக இயங்கும் குறிப்பிட்ட சில முக்கிய இடங்கள், பெரு கிராமங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. அப்பள்ளிகளில் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், பள்ளி இயங்கும் வழியாக குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டும் ஒரிரு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவை மாணவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், கிராமப் புறங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பஸ்சில் தொங்கியபடி கரணம் தப்பினால் மரணம் என்று ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.குறிப்பாக நைனார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியசிறுவத்துார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கருந்தலாக்குறிச்சி, வி.மாமந்துார், பொற்கவாடி, சித்தேரி, பானையந்துார் மற்றும் கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர், க.அலம்பளம், சோமண்டார்குடி, பரமநத்தம், மேலுார், புக்கிரவாரி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வழியாக குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.பள்ளி வேலை நாட்களில் நைனார்பாளையம் - தொழுதுார் செல்லும் அரசு பஸ் மற்றும் கள்ளக்குறிச்சி- பெரியசிறுவத்துார் வழியாக செல்லும் அரசு பஸ்களில் மாணவர்கள் பஸ் படிக்கட்டு மட்டும் பக்கவாட்டில் தொங்கியபடி நாள்தோறும் பயணம் செய்கின்றனர். அதேபோல், கள்ளக்குறிச்சியில் இருந்து தண்டை, பெருவங்கூர் வழியாக செல்லக்கூடிய அரசு பஸ்களிலும் மாணவர்கள் படியில் தொங்கியபடி நாள்தோறும் பயணிக்கின்றனர்.பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான வகையில் பயணம் செய்வதை தவிர்ப்பதற்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் போதிய பஸ் வசதியின்மையால், மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வது தொடர் கதையாக இருக்கிறது.கிராமப்புறம் வழியாக செல்லும் அரசு பஸ்சில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை காணும் பொதுமக்களை கடும் அச்சமடைய செய்கிறது. எனவே, பள்ளி வேலை நாட்களில் மாணவ மாணவிகளின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ