அரசு மருத்துவ கல்லுாரி மகப்பேறு பிரிவில் கூடுதலாக புதிய கட்டடம்; சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மகப்பேறு பிரிவில், தரம் உயர்த்தப்பட்ட கூடுதலாக புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.இது தொடர்பாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் சட்டசபையில் பேசியதாவது; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு கச்சிராயபாளையத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஒரு மாதத்திற்கு 800 முதல் 1,000 குழந்தைகள் வரை பிரசவிக்கப்படுகிறார்கள். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு, கர்ப்பிணி பெண்களின் வருகைகள் அதிகளவில் உள்ளது. அதனால், மகப்பேறு பிரிவு வளாகத்தில் கூடுதலாக தரம் உயர்த்தப்பட்ட புதிய கட்டடம் கட்டி தர வேண்டும். அதேபோல், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துப்புறவு பணியாளர்கள் 171 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சிறுவங்கூர் மற்றும் கச்சிராயபாளையம் சாலை என இரு இடங்களுக்கு துாய்மை பணியாளர்களை பிரித்து அனுப்படுகிறது. இதனால் மூன்று வேலை துாய்மை பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.