உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 126 அடி உயர அ.தி.மு.க., கொடி கம்பம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

126 அடி உயர அ.தி.மு.க., கொடி கம்பம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட 126 அடி உயரமுள்ள கொடி கம்பம் பலத்த காற்று காரணமாக சாய்ந்து கிழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை சேலம் புறவழிச்சாலையில், கட்சி நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக, கட்சி நிர்வாகி இடத்தில் 126 அடி உயரம் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. ஜூன் 29ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, 126 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக கொடி கம்பம் தாக்குப் பிடிக்காமல் வலது பக்கம் சாய்ந்து அருகில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியின் மேல் உரசி கீழே விழுந்தது. கொடி கம்பம் அதிகாலை முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் கட்சி கொடி கம்பத்தினை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ