மேலும் செய்திகள்
கூடலூர் -சுருளி அருவி ரோட்டில் விபத்து அபாயம்
11-Oct-2025
தியாகதுருகம்: தியாகதுருகம் புறவழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் மதுபிரியர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தியாகதுருகம் நகரின் மேற்கே திருக்கோவிலுார் சாலையை சேலம் - சென்னை நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் புறவழி சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை ஒட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் கூட்டம் எந்நேரமும் அதிகமாக உள்ளது. கடைக்கு வரும் மதுபிரியர்கள் வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். மது வாங்கி சென்று அருகில் உள்ள வயல்வெளியில் அமர்ந்து குடித்துவிட்டு செல்கின்றனர். போதை தலைக்கேறி சாலையின் நடுவில் நின்று ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இங்கு சிறு விபத்துக்களும் நடக்கிறது. போதை ஆசாமிகளின் இடையூறால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வழியே பெண்கள், சிறுவர்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். குறிப்பாக மாலை 6:00 மணிக்கு மேல் இவ்வழியே செல்வதை பலரும் தவிர்த்து வழக்கம்போல் நகருக்குள் புகுந்து செல்கின்றனர். போதை ஆசாமிகளின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புறவழிச் சாலை அமைத்தும் அதனை அனைவரும் பயன்படுத்தாத நிலை உள்ளது. டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெரும் விபத்து நடப்பதிற்கு முன், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11-Oct-2025