பள்ளிகளில் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் சி.இ.ஓ., அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் ஏற்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரிய்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது. இரு கட்டங்களாக நடந்த கூட்டத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 75 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேர் கலந்துகொண்டனர். டி.இ.ஓ., ரேணுகோபால், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், பள்ளி துணை ஆய்வாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் ஏற்படுத்திட வேண்டும். 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் தேர்ச்சியை கட்டாயம் உயர்த்த வேண்டும். மாநில அளவிலான அடைவு தேர்வுகளில் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்து அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைக்க வேண்டும். மாணவர்களின் தினசரி வருகையை உயர்த்திட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறையின் 'போதை பொருள் எதிர்ப்பு மன்றம்' மற்றும் 'புகையிலை பொருட்கள் எதிர்ப்பு' குறித்து விளம்பர போர்டுகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.