உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவிக்கு பாராட்டு விழா

மாணவிக்கு பாராட்டு விழா

சங்கராபுரம்; மருத்துவம் பயில உள்ள அரசு பள்ளி மாணவிக்கு சங்கராபுரம் வள்ளலார் மன்றம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - ஜான்சிராணி தம்பதி மகள் பூவிழி. இவர், தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, நீட் தேர்வில் 422 மதிப்பெண்கள் பெற்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில், பூவிழிக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., பயில சீட் கிடைத்துள்ளது. இதையொட்டி பூவிழிக்கு பாராட்டு விழா நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி, இன்னர் வீல் கிளப் சாசன தலைவி கமலாவதி முன்னிலை வகித்தனர். வள்ளலார் பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். இன்னர் வீல் கிளப் தலைவி இந்துமதி, பொருளாளர் கலைவாணி, முன்னாள் தலைவர்கள் தீபா சுகுமார், மஞ்சுளா கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பூவிழியை பாராட்டி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சூட்கேஸ், ஆடை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி முதலாமாண்டுக்கு தேவையான புத்தக செலவினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சுபாஷினி ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !