கலைஞர் கைவினை திட்டம் துவக்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கலை மற்றும் கைவினை தொழில் செய்பவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய ஜாமின் இல்லாத கடன் வழங்கவும், சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் தையற் கலைஞர், மண்பாண்டம், சிற்ப கைவினைஞர், தச்சு வேலை, பூ அலங்காரம், சிகை அலங்காரம், அழகுக்கலை, பாய் மற்றும் கூடை பின்னுபவர், மூங்கில் பொருட்கள் செய்பவர், நெசவு, துணி வெளுப்போர், வண்ணம் தீட்டுபவர் உட்பட பல்வேறு வகையான கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபடும் நபர்கள் பயன்பெறலாம்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொழில்திறன் சார்ந்த மேம்பட்ட பயிற்சியும், மேம்பட்ட தொழில் நுட்ப கருவிகளை கொண்டு தொழில்புரிய 3 லட்சம் ரூபாய் வரை ஜாமின் இல்லாத கடனுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்படும்.கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் போது 5 சதவீதம் வரை வட்டி மானியமாக வழங்கப்படும்.கடனுதவி பெற விரும்புவோர் தங்களது தொழிலில் 5 ஆண்டுகள் அனுபவமும், 35 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் புகைப்படம், ஆதார் அட்டை, தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகவல்களை பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.95/2ஏ2, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கேட்டறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.