ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.40 ஆயிரம் பணம் மோசடி
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஏ.டி.எம்.,கார்டை மாற்றி கொடுத்து ரூ.40 ஆயிரம் பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி,59; இவர் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் நகை கடனுக்கு பணம் கட்டுவதற்காக சென்றுள்ளார். வங்கிக்கு முன்பாக உள்ள ஏ.டி.எம்.,மையத்தில் தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிய சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த மர்ம ஆசாமி, அந்தோணிசாமிக்கு பேலன்ஸ் செக் செய்வதற்கு உதவி செய்வது போல் ஏமாற்றி அவரது ஏ.டி.எம்., கார்டை பெற்று கொண்டு வேறு ஏ.டி.எம்.,கார்டை கொடுத்துள்ளார். அதன்பின் அங்கிருந்து சென்ற மர்ம ஆசாமி வேறுறொரு ஏ.டி.எம்., மையத்தில் அந்தோணிசாமியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார்.அந்தோணிசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.