செங்கல் தட்டுப்பாட்டால் விலை உயர்வு: வீடு கட்டுபவர்கள் திண்டாட்டம்
தியாகதுருகம்: செங்கல் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளதால் வீடு கட்டுபவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். கட்டுமான தொழிலுக்கு முக்கிய மூலப் பொருளாக செங்கல் விளங்குகிறது. நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஹாலோ பிளாக், சாலிட் பிளாக், ஆஷ் பிரிக்ஸ் உள்ளிட்டவைகள் பயன்பாட்டுக்கு வந்தாலும் செங்கல்லுக்கு மவுசு குறையாமல் உள்ளது. செங்கல்லை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருப்பதால் சொந்த வீடு கட்டுபவர்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் செங்கல் உற்பத்தி செய்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோமுகி ஆற்றுப்படுகையில் உள்ள மணல் கலந்த செம்மண் கொண்டு தயாரிக்கப்படும் செங்கற்கள் உறுதியானதாக உள்ளதால் இதனையே பலரும் விரும்பி வாங்குகின்றனர். செங்கல் சூளைக்கு தேவையான எரிபொருளுக்கு மரங்கள் கிடைப்பது நாளுக்கு நாள் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் இத்தொழில் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே செங்கல் உற்பத்தி செய்யும் நிலை உள்ளது. பெரும்பாலும் சீமை கருவேல மரங்கள் செங்கல் சூளைக்கு எரிபொருளாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பருவ மழை பெய்து வருவதால் இத்தருணத்தில் செங்கல் உற்பத்தி செய்து அதனை உலர்த்துவது மிகுந்த சிரமமாக உள்ளது. இதன் காரணமாக ஜன., மாதம் வரை செங்கல் உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் ரூ. 9 க்கு விற்ற ஒரு செங்கல் விலை தற்போது 2 ரூபாய் விலை உயர்ந்து ரூ.11 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்ந்தாலும் செங்கல் கிடைப்பது மிகுந்த தட்டுப்பாடாக உள்ளது. இதனால் பலர் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., விலை குறைப்பால் சிமெண்ட் விலை குறைந்ததே என்ற நிம்மதியில் இருந்த நிலையில் தற்போது செங்கல் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை உயர்வு கட்டுமான பணிக்கு சவாலாக மாறி உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழில் சார்ந்த மற்ற பொருட்களின் விற்பனையும் மந்தமடைந்துள்ளது.