பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால், பயணிகள் நிற்க கூட இடம் இல்லாமல், கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.உளுந்துார்பேட்டை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்கு பஸ் நிலையம் அருகே, சென்னை மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சாலைகளில், சிலர் வாகனங்களை அத்துமீறி நிறுத்துகின்றனர். அதேபோல, சாலையோர கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் வாகன நெரிசல் தொடர்கதையாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலைய நடைபாதையில், பஸ் நிற்கும் இடங்களில் கூட சிலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால் பயணிகள் அங்கு நிற்க கூட இடம் இல்லை. மழை மற்றும் வெயிலுக்காக கூட பயணிகளால், ஒதுங்கி நிற்க முடியாத சூழல் நிலவுகிறது.அதையும் மீறி பயணிகள் அங்கு நின்றால், ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்கின்றனர். இதனால் பயணிகள் பஸ்சுக்காக, சாலையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்இதுஒரு புறம் இருக்க பஸ் நிலையம் அருகே, கடந்த சில வாரங்களாக, திருவெண்ணெய்நல்லுார் சாலை சந்திப்பு பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த, போக்குவரத்து போலீசார் நின்று பணி செய்ய வைக்கப்பட்ட நிழற்குடை கூட அங்கிருந்து அகற்றப்பட்டு, அந்த இடமும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கூட கண்டு கொள்ளமால் உள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால், பெரும்பாலான விரைவு பஸ்கள் உளுந்துார்பேட்டைக்குள் வராமல், புறவழிச் சாலையிலேயே சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம், போலீசார், பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதைகளை மீட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், 'என்றனர்.